×

சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடு வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தரம் நவீன பரிசோதனை கூடத்தில் ஆய்வு: ₹75 கட்டணம் செலுத்தினால் 15 நாளில் முடிவு

சென்னை, ஜூலை 16: சென்னை மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தரமில்லாமல் இருந்தால், உடனடியாக சென்னை குடிநீர் வாரிய நவீன பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி 15 நாளில் முடிவை பெறலாம். அதன் மூலம் அதை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கு வருவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர தங்கள் வீட்டு தேவைகளுக்கு வீடுகளில் போர்வெல் அமைத்தும், சிறிய அளவிலான கிணறுகளை வெட்டியும் பயன்படுத்தி வருகின்றனர். பலர் கடைகளில் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா என்பது முக்கியம்.

ஏனென்றால் தரமில்லா தண்ணீரை பயன்படுத்தும் போது உடலுக்கு ஒவ்வாவை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற நிலமை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கூடும் என்பதால் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தரத்தை அறியும் நவீன பரிசோதனைக் கூடத்தை, கடந்த நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பரிசோதனைக் கூடத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீரை பரிசோதிக்க தனித் தனி நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனைக் கூடம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் தரமான குடிநீர் வழங்குதல், பாதுகாப்பான முறையில் கழிவுநீர் அகற்றும் பணி, குடிநீர் தரத்தை பரிசோதிப்பது ஆகிய பணிகளை சென்னை குடிநீர் வாரியம் ஒருங்கிணைந்து செய்து வருகிறது. இந்த பரிசோதனைக் கூடத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்று நீர், ஆழ்துளை நீர் போன்ற நீர்களின் தரத்தை ஆய்வு செய்யும் தர உறுதி பிரிவும் இயங்கி வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள குடிநீர் தரத்தை உறுதி செய்யும் வகையில் தினமும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைக் கூடத்தில் குடிநீர் தரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரத்தை பரிசோதிக்க தனித்தனி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பரிசோதிக்க முறையே 23 மற்றும் 16 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த நவீன பரிசோதனை கூடமானது, சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படும் குடிநீரை பரிசோதிப்பதற்கு மட்டுமின்றி அவரவர் வீட்டு ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீரின் தரம் குறித்து பரிசோதனை செய்ய முடியும். புதிதாக கட்டிடம் கட்ட போகிறவர்கள் தாங்கள் அமைத்த போரில் வரும் நீரினை ஆய்வு செய்ய முடியும். பரிசோதனை முடிவுகளை 15 நாட்களில் அறிந்து கொள்ளலாம். அதில் கிடைக்கும் முடிவுகள் மூலம் அந்த தண்ணீரை பயன்படுத்துவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோரும் அந்த இடத்தின் நீரின் தரத்தை எளிதாக அறிந்து கொள்வதற்கு இந்த வசதி மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடு வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தரம் நவீன பரிசோதனை கூடத்தில் ஆய்வு: ₹75 கட்டணம் செலுத்தினால் 15 நாளில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Chennai, ,Chennai ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...